×

தமிழ்நாடு அரசு, உயர் நீதிமன்ற உத்தரவை மீறி முறைகேட்டில் ஈடுபட்ட பதிவாளருக்கு பணி ஓய்வு வழங்கிய துணைவேந்தர்: ஊழல் நிரூபிக்கப்பட்டவருக்கு பாராட்டு விழாவால் சர்ச்சை

சேலம்: தமிழ்நாடு அரசு, உயர்நீதிமன்ற உத்தரவை மீறி சேலம் பெரியார் பல்கலைக்கழக மாஜி பதிவாளர் தங்கவேலுக்கு பணி ஓய்வை துணைவேந்தர் ஜெகநாதன் வழங்கி உள்ளார். மேலும், ஊழல் நிரூபிக்கப்பட்ட அவருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், கணினி அறிவியல் துறை தலைவரும், பொறுப்பு பதிவாளராக இருந்த தங்கவேல் மற்றும் தமிழ்துறை தலைவர் பெரியசாமி ஆகியோர் மீது பல்வேறு முறைகேடுகள் உறுதியானதால், நேற்றுடன் ஓய்வு பெற்ற பதிவாளர் (பொ) தங்கவேலை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய துணைவேந்தர் ஜெகநாதனுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன் உயர்கல்வித்துறை அறிவுறுத்தியது. ஆனால், அவர் சஸ்பெண்ட் செய்ய முறைகேட்டிற்கான ஆதாரத்தை துணைவேந்தர் ஜெகநாதன், உயர்கல்வித்துறையிடம் கேட்டார்.

அதனடிப்படையில் முறைகேடு செய்ததற்கான ஆதாரங்களை துணைவேந்தருக்கு அனுப்பிய உயர்கல்வித்துறை மீண்டும் அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறியது. மேலும், முறைகேட்டில் ஈடுபட்ட தங்கவேல் மீது நடவடைக்கை எடுக்க துணைவேந்தருக்கு சென்னை உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டது.இதனிடையே தங்கவேல் மருத்துவ விடுப்பில் இருந்தபோது பதிவாளர் பொறுப்பை விஸ்வநாதமூர்த்திக்கு துணைவேந்தர் அளித்தார். இதனால், கணினி அறிவியல் துறை தலைவராக கடந்த 4 நாட்களாக தங்கவேல் பணியாற்றினார். இந்தநிலையில் நேற்று பிற்பகலில் மாஜி பதிவாளர் தங்கவேலுக்கு பணி ஓய்வு வழங்கி துணைவேந்தர் ஜெகநாதன் உத்தரவிட்டார்.

இதனால் அவர், மிக மகிழ்ச்சியோடு தனது துணைவியாரோடு கணினி அறிவியல் துறையில் நடந்த பணி ஓய்வு பாராட்டு விழாவிற்கு வந்தார். அங்கு அவருக்கு சந்தனமாலை, பூங்கொத்து, சால்வை அணிவித்து பணியாளர்கள் மற்றும் சில பேராசிரியர்கள் வாழ்த்தினர். பின்னர் மாலை மரியாதையுடன் மாஜி பதிவாளர் தங்கவேல், வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். அரசு மற்றும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவையு மீறி மாஜி பதிவாளருக்கு பணி ஓய்வை துணைவேந்தர் ஜெகநாதன் வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தங்கவேலுக்கு பணி ஓய்வு பாராட்டு விழாவை கண்டித்து பெரியார் பல்கலைக்கழக பணியாளர் சங்கத்தினரும், ஆசிரியர் சங்கத்தினரும் நேற்று மாலை மீண்டும் பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில், நேற்று முன்தினம் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடத்திய 33 பேராசியர்களுக்கு மெமோ வழங்கப்பட்டதற்கும் ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்து உள்ளது. மேலும், இதுகுறித்து வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளனர்.

The post தமிழ்நாடு அரசு, உயர் நீதிமன்ற உத்தரவை மீறி முறைகேட்டில் ஈடுபட்ட பதிவாளருக்கு பணி ஓய்வு வழங்கிய துணைவேந்தர்: ஊழல் நிரூபிக்கப்பட்டவருக்கு பாராட்டு விழாவால் சர்ச்சை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Govt ,Salem ,Vice ,Jaganathan ,Thangavel ,Salem Periyar University ,Tamil Nadu Government ,Dinakaran ,
× RELATED 2024-25க்கான மாணவர் சேர்க்கைக்கு...